நஞ்சுண்டு நலியோம்
நஞ்சுண்டு நலியோம்
வைத்தியர். கதிரேசபிள்ளை தர்ஸனன்
சுகாதார வைத்திய அதிகாரி,
கிளிநொச்சி.
(29ம் அணி)
.
இயற்கையோடிணைந்து வாழ்ந்து
இளமையைப் பேணி, மண்ணில்
வியத்தகு விளை பொருட்கள்
விதவித மாகச் செய்து
பயத்தினைப் போக்கிப் பஞ்சம்
பட்டினி தீர்த்த எங்கள்
செயற்கரும் செயல்கள் இனியெம்
செவி வழி மட்டும் தானோ?
*
பயிர்களில் பாசம் வைத்து
பாரினில் பசுமை போர்த்தி
உயிர் தரும் உணவைக் கொண்டு
ஊரெலாம் பசியைப் போக்கி
தயிரொடு பாலும் மோரும்
தாகத்தைத் தீர்க்கும், கோடை
வெயிலிலும் குளிர்மை சேர்த்து
வேதனை தீரக் காண்போம்!
*
நெல்லுடன் குரக்கன் சாமை
தினையொடு வரகும் நாட்டி!
பல்லுயிர் தழைக்கச் செய்து
பசுமையில் புரட்சி செய்து,
புல்லுடன் பூண்டும் கையால்
பிடுங்கிய காலம் போயெம்
நல்லுடல் மெல்லக் கொல்லும்
நஞ்சுகள் தூவுகின்றோம்!
*
சந்தையில் பளபளக்கும்
மரக்கறி, பழங்கள், எங்கள்
சிந்தையை மயக்கும் – ஆனால்
சிந்திப்போம், இவைகள் யாவும்
முந்தியே மருந்தடித்து
முற்றிடவைத்த பண்டம்!
விந்தையே என்று எண்ணி
விரதம் வாங்கி உண்ணுகின்றோம்!.
*
மரபணு மாற்றம் செய்து
மாசுக்கள் பலவும் சேர்த்து
உரமிட்டு உருவம் மாற்றி,
உள்ளுக்குள் ஊசியேற்றி,
தரமென்று சொல்லி விற்கும்
தரங்கெட்ட பொருளை நாமோ
வரமென்று வாங்கியுண்டு
வலிகொண்டு வாடுகின்றோம்!
*
பருகிடும் பானம் மற்றும்
கொதித்திடும் பண்டம் யாவும்
திருடிடும் எங்கள் ஆயுள்!
திருந்துவோம் இன்றே நாமும்
அருகிடும் எங்கள் மண்ணின்
உணவுகள் மருந்தாம்! பேணிப்
பெருகிடப் பண்ணி நாளும்
பெருநலம் பெற்று வாழ்வோம்!
*
தகரத்தில் அடைத்தவைக்கும்
கைகளில் நிறைத்தவைக்கும்
நிகரற்றதென்று சொல்லி
நமைக்கொல்லும் பொருட்களுக்கும்
பகருவோம் மறுப்பை என்றும்
சுகநலம் சேர்க்கும் எங்கள்
நிகரிலா உணவு செய்து
நீடூழி காலம் வாழ்வோம்!
*
புற்றுநோய் மலிந்து போக
புதுப்புது நோய்கள் சேர
மற்றவர் துன்பம் கண்டும்
மாறிட எண்ணோமெனில்
கற்றதில் பயனும் இல்லை!
கருத்தினில் இருத்தியே நம்
உற்றவர் வாழ்வை காக்க
உறுதிகொண்டெழுந்து நிற்போம்!
*
வீட்டினில் தோட்டம் வைத்து
மரக்கறி, பழங்கள் செய்வோம்!
காட்டினைப் பெருக்கி நல்ல
கழனிகள் விதைப்போம்!- நாளும்
ஏட்டிலே கற்ற கல்வி
எம்மவர் வாழ்வைக் காக்கும்!
வாட்டிய துன்பம் நீக்கி
வரலாறு எழுத வாரீர்!
*****
This verse by Dr. K. Tharshanan, (29th Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014