ஆடு வரையும் மடல் ஆண்டவனுக்கு” – சி.துர்க்கா (24ஆம் அணி)

“ஆடு வரையும் மடல் ஆண்டவனுக்கு”

–  சி.துர்க்கா (24ஆம் அணி)

ஆறடி ஆலை,

மரண வேளை,

ஆவணி ஒன்று.

ஆலமரம் கீழே வேரூன்றி இருக்கும் வைரவா, உன் கழுத்தின் வடை மாலைக்கு, எப்போது விடை கிடைக்கும் எனக் காத்திருக்கும் சிறார்களுக்கும்; உன் பாதமருகே படைக்கப்பட்ட படையல்களை, சேதமுறாமல் சேகரிக்க முனையும் இளசுகளுக்கும்; தேனாய் இனிக்கும் உன் பஞ்சாமிர்தங்களை தேனீக்களிடமிருந்து மீட்டெடுத்து தேவைதைகளுக்கும்; கற்பூரம் கூட இன்றி நீ இருந்த போதும், காலமெல்லாம் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்ட அடியவர்க்கு அயராது வரம் அளித்துத் துயரம் தீர்த்த உன் முன்னாலேயே,உன்க்காக நடப்பட்ட கம்பத்திலே கட்டப்பட்டிருக்கும் என் கழுத்தின் கத்திக்கு என்ன விடை சொல்வாய்?

என் முன்னால் அறுக்கப்பட்ட அத்தனை கழுத்துக்களுக்கும், கதறல்களுக் கும் விடை தரமுடியாது, தடையொன்றும் சொல்லாது, மடை முன் மண்டியிட்டு இருக்கும் நீ, என் கழுத்தின் கத்திக்கும் உடை வால் உருவி, உயிர் கொடுப்பாய். இருந்தும், எஞ்சியிரு க்கும் எண்பது நிமிடத்தில் கெஞ்சி அழுதும் மிஞ்சுவது எதுவுமில்லை என்பதால், கொஞ்சம் சொல்வேன்; வெஞ்சினம் தவிர்த்து நெஞ்சினில் கொள்.

ஆலயங்களின் கோலங்களை,ஆடுகளின் அறுப்புகளிலே தினம் தேடுகின்ற மனிதன் ஆயிரம் ஆட்டினால் அணி ஒன்று செய்து அனுதினம் அதற்கு தீனினை அள்ளி தெவிட்டும் வரை ஊட்டி உடம்பு வளர்த்தான்.

உணர்வுகள் துளிர்த்தால் உடலுரம் குறையுமென்று, ஊர்மனை தவிர்த்து எம் உடலுறவு தவிர்த்தான். எம் நாடி மீது நீளும் தாடி கண்டு தினம் இறுமாப்பு கொண்டான்.

பொட்டு ஒன்று நெற்றியில் இட்டு, பட்டு ஒன்று பச்சை நிறத்தில் வட்டமாய் என் கழுத்தில் கட்டி உனக்கென நேர்ந்து விட்டான்.

ஊரெங்கும் ஒருவித உற்சாகம் பிறக்கும். உலாவரும் தெருக்களும்,உள்ளிருக்கும் சுள்ளி வீடுகளும் பூரிக்கும். உவகையில் வைகறைச் சயனம் கலையும். உத்தமியர் நித்தம் புத்தம் புது புடவை போர்த்தி ஊர்வலம் போவர். கேட்டால் ஊர்விழாக்காணும் திருவிழா என்பர்.

ஊர்மனைக் கோடியில்,தேடிய விழிகளுக்கு மாடியாய்த் தென்படும் அந்த ஆலமரம் ஆர்ப்பரிக்கும். பலவித வண்ணத்தில் உன் உடல் ஜொலிக்கும் பட்டுக்களும், தட்டுக்களும், கொட் டும் மேளங்களும் வானை முட்டும்.மடைகளும் வடைகளும் வண்டிகளில் வந்திறங்கும்.

வணங்க வந்தோரும்,வாயாட வந்தோரும்,வாயார வாழ்த்தி வணங்க உனக்கு கற்பூர ஆராத்தி காட்டி பூஜை செய்வர். கண்கள் கலங்க, கள்ளங்கபடமற்று உனை வணங்கி நிற்பேன் நான்.

தரை அதிர, இரை மீட்கும் பாம்பாய்; மெளனமாய் இருந்த மந்திரவாதி குரல் தர,உன்னடியவர் இருவர் என்னவன் ஒருவனை கழுத்தில் தள்ளி, தர தரவென இழுத்துச்சென்று உன் முன்னால் அவன் முழங்கால் தேய ஏதோ சொல்லி முறையிடுவர்.

பயத்தில் அவன் உடல் வியர்த்து சிலிர்க்கும். இதயத்தின் வேதனை உங்கள் எல்லோர் காதுகளுக்கும் “சதக் சதக்”எனக் கேட்கும். விழிகள் பிதுங்கி வேதனையில் உங்களைப் பார்த்துக் கெஞ்சும். வேண்டாம் என்று  வாய் தடுமாற நாக்கு அழும். கால்கள் உன் வேல் கண்டு தாளம் போடும். கடைசியில் அவன் கண்ணீர் மண்ணீரைச் சேரும்.

இத்தனை வேதனைகளும்,விம்மல்களும் கண்டு,கத்தி மீது உன் கரம் சந்தனம் தடவும்.சாம்பிராணி காட்டும். குங்குமம் தீண்டி, இரத்தத்தின் வண்ணத்தைக் கண்களுக்குக் காட்டும்.

காரணம் புரியாது அவன் கண் மூடி முழிக்கையில் வீசப்பட்ட கத்தியால் கழுத்துத் துண்டித்து, உடல் உதறும், தலையற்று, சில வினாடி. சீறிய இரத்தம் தரை நனைக்கும். தாவணிகள் தள்ளி நிற்பர் வண்ண உடை மேல் கறை தவிர்க்க.

அன்பால் உலகை வெல் என்றாய், மாமிசம் தவிர்த்து மரக்கறி தின்றாய். அகிம்சையால் அனைத்தையும் ஆள் என்றாய்.

கூடி நின்று கும்பல் கும்மளமிட, கும்பிட நிற்கும் குழந்தைகள் மத்தியில் ஏன் குரூரம் விதைத்தாய். சிந்திய இரத்தத்தில் இன்று மேனி சிலிர்த்த சிறுவன், நாளை சிலிர்க்காமல் செய்வான் கொலை யொன்று. உன் மடையினில் மாமிசம் வேண்டும்மென்றால் எமை மறைவினில் மடியச்செய்து ருசித்து உண் வயிராற.

சாலையின் சந்திகளிலும், பாயின் படுக்கைகளிலும் செய்யப்படும் கொலைகளால் மட்டுமே, நிலைத்து நிற்க முடியுமென்ற உன் மக்களுக்கு; உண்மைகளை உளவறிய வை.

எங்கே, எப்போது, யாருக்காகக் கொலைகள் நடந்தாலும்; கொலைகளுக்காக வருந்துகின்ற மனமும், திருந்தி வாழும் எண்ணமும் வளரும் வரை சமுதாயம் சரித்திரத்தை தொடாது என கடைசி வரை நம்பி;

மற்றுமொரு திருவிழாவில் உன் மண் இரத்தம் காணாது என்ற நம்பிக்கையில் உனக்கான விழாவில் உன் மக்களுக்காக உயிர் துறக்க,

– அளவிட முடியாத ஆதங்கத்துடன்,

ஆடு ஒன்று.

பிரதிகள்:

1. மிருகவதை ஒழிப்போர்
2. கொலை வெறியோடு அலைவோர்.

“நாடி”,  யாழ் மருத்துவ மாணவர்களின் படைப்புகளை சுமந்து மிதக்கும் ஒரு சிறிய பேழை. அதன் முனைய வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்ட  சில ஆக்கங்களின் மீள்பார்வை. 

Paul Bright

33rd batch. MSU President - 2014

You may also like...

Leave a Reply