தாமதி | சி.தாரணி 38ம் அணி

பலவீனம்: உன் பழக்கமல்ல – ஓர்
நொடியின் நெருக்கடியில் – உயிர்
விரைந்து நிறுத்த நினைத்துவிட்டாய்

என்னில் சிறு கீறலும் இழைத்திருக்காத
நிகழ்வுகள் சில – உன்
உள்மனம் உடைத்திருக்கக்கூடும்
உயிர் நண்பர் என்றாலும்
உணர்வுகள் வேறன்றோ!

உன் பற்பல பதிவுகளுக்கு –நான்
பரிகசித்து சென்றிருப்பேன் -அன்று
அவற்றை அர்த்தப்படுத்தும்
அறிவு இருந்திருக்கவில்லை
வலி நிறைந்த உன் தரவேற்றங்களின்
சிறு துளியை பிரித்தறிய – என்னுள்
புலமை இருந்திருக்கவில்லை

சிதறுண்டு இருந்தபோதும்
நீ சிரித்திருக்கிறாய் – அன்று
உன் உறுதியை
அண்ணாந்து பார்த்தவன் நான்

அதனாலன்றோ – நீ
உடைந்து கொண்டிருந்ததை
உணரமுடியவில்லை

திணறி இறப்பதற்குள்
திரும்ப அழைத்துவிட்டார்கள்
கணநேரம் நீ தாமதித்து – என்னிடம்கதறி அழுதிருக்கலாம்.

உன்நிலை அறிவிப்பதற்கு – நான்
தகுதியற்றவனாய் இருந்திருக்கலாம்
உடல் விட்டு உயிர் பிரிய – நீ
நிச்சயம் தகுதியற்றவன்

விரக்தி வியாபித்திருக்கும் வினாடிகளில்
கடிகார கம்பி தன் நெடிய பயணம்
முடிக்கும் ஓர் நிமிடத்திற்காவது ‘தாமதி’
கடக்கும் அந்நிமிடத்தில் – உணர்வை
அடக்கும் வல்லமை படைத்தவன் நீ

எனில் இனி……தாமதி

Editor MSU

Editor of MSU

Leave a Reply