மருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி

அது மருத்துவ வாரம்-2013. நாடகப்போட்டியும் உண்டாம் என்றொரு அறிவிப்பு. எமது 35ம் அணி தயார்படுத்திய நாடகத்துடன் நானும் கைலாசபதி அரங்கிற்குள் சென்று சாதாரணமாக அமர்ந்துகொண்டேன். மேடை நாடகம் என்பதற்கு என் மனதிலிருந்த வரைவிலக்கணத்தை மாற்றிய நாள் அது! அது என்ன பிரமாண்டம்…..! அது மேடை தானா என்று ஐயப்படுகின்ற விதமான மேடை வடிவமைப்பு….. திரை மூடித்திறக்காமலேயே கதையின் போக்கை குறுக்கீடு செய்யாமல் காட்சி மாற்றத்துடன் மேடை வடிவமைப்பை மாற்றுகின்ற வித்தை…… கண்களைக் கைது செய்கின்ற நடிப்பு…. உணர்ச்சிகளை அள்ளி எறிகின்ற முகங்கள்….. அதற்கேற்றாற் போன்ற ஒப்பனை….. கதை பேசும் ஒளியமைப்பு…. எத்தனையோ வாத்தியங்கள் மற்றும் குரல்களில் பிண்ணனி இசை….. இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றது 32ம் அணியின் “ஊமைகளாய்” நாடகத்தின் “ஊமைகளாய்….”பிண்ணனிப்பாடல்! இதுவரை இப்படியான மேடை நாடகத்தை நான் பார்த்ததில்லை.ஒவ்வொரு வருடமும் முதலாம் வருட மாணவர்களுக்கு இதே எண்ணம் தோன்றியிருக்கும் என்பது திண்ணம். 2015 மருத்துவ வாரத்தில் எமது 35ம் அணி அரங்கேற்றிய “புனலே பூதமாய்” நாடகத்தில் “ஊமைகளாய்” நாடகத்தின் தாக்கம் இருந்ததை மறுக்க முடியாது.

ஓர் மேடை நாடகத்தை பொறுத்தவரை நடிகர்களின் மீதே பார்வையாளர்களின் மொத்தக் கவனமும் குவிகின்ற போதும் கதைக்கரு இயக்கம் நடிப்பு அரங்க வடிவமைப்பு பிண்ணனி இசை எனும் ஐந்து விடயங்களும் சம பங்கு வகிக்கின்றன. புள்ளிகளும் இந்த ஐந்து விடயங்களுக்குமே வழங்கப்படுகின்றது. இவற்றுடன் ஒளியமைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் சாதாரணமான ஒரு பார்வையாளனை ஏனைய விடயங்கள் யாவும் நடிகர்களின் நடிப்பினூடாகவே சென்றடைகிறது. அந்த வகையில் நடிப்பு முக்கியத்துவம் பெறுவதுடன் பேசுபொருளாகவும் அமைகின்றது.

மருத்துவ வார நாடகப் போட்டிகளின்போது ஏறத்தாழ மொத்த அணியினரும் இரவு பகலாக நாட்கணக்கில் மும்முரமாக இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நாடக ஆற்றுகையின்போது மேடையில் தோன்றுபவர்கள் ஆற்றுகையின்போதே தமக்கான வெகுமானத்தை கைதட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள திரைக்குப் பின்னாலுள்ள கலைஞர்கள் அதிலும் குறிப்பாக அரங்க வடிவமைப்பாளர்கள் ஏறத்தாழ முற்றாக மறக்கப்படுகிறார்கள் என்பது எனது ஆதங்கம்.

எமது 35ம் அணியின் “புனலே பூதமாய்” நாடகத்தில் கிணறு ஒன்று அரங்கில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாதிப்பக்கம் புதிய கிணறு போன்றும் பாதிப்பக்கம் பாழடைந்ததாகவும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் கிணறு சுற்றப்பட்டு முன்பக்கத் தோற்றமும் பாழடைந்ததாக மாற்றப்படவேண்டும். இதன்போது கிணற்றிலிருந்து ஒரு பூதம் வெளிவரும். கூடவே கிணற்றிலிருந்து புகை வெளிக்கிளம்ப வேண்டும். இதுதான் திட்டம். ஏறத்தாழ ஒன்றரை மீற்றருக்கும் குறைவான விட்டமுள்ள கிணறு அது. கிணற்றினுள் பூதமாக நடிப்பவருடன் அவர் ஏறிப் பாய்வதற்கென ஒரு கதிரை அத்துடன் புகை போடுவதற்கென ஒரு பெரிய தணல் சட்டி இவற்றுடன் கிணற்றை சுற்றுவதற்கு என இருவர். மேடையில் நாடகம் ஓடிக்கொண்டிருக்கிறது.பார்வையாளர்களின் கைதட்டல்கள் சிரிப்பொலிகள் என்பன பின்னணிக் கலைஞர்களைக் கூட திரை விளிம்பினூடாக எட்டிப் பார்க்கச் செய்யும். இதனால் தான் முதலாவது நாடகம் துவங்கிய உடனேயே அரங்க வடிவமைப்பு மற்றும் ஒப்பனை வேலைகளுக்கென நியமிக்கப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் மெதுவாக நழுவி அரங்கிற்குள் சென்று அமர்ந்துவிடுவர்.

அந்த “ஹரஹர மஹா தேவகி” காட்சிக்கு பார்வையாளர்களின் ஆரவாரத்தைக் கேட்டபோது திரையில் பின்னால் நின்ற நானும் அவாவை அடக்கமுடியாமல் அரங்கின் முதலாவது கதவின் வழியாக மேடையை எட்டிப் பார்த்தேன். திரை திறந்ததிலிருந்து திரை மூடும் வரை ஏறத்தாழ அரைமணிநேரம் வெப்பம் கக்குகின்ற அந்த தணல் சட்டியுடன் கை, காலை நீட்டி அமர முடியாத அந்த கிணற்றினுள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த அந்த இருவரும் தான் எனக்கு நாடகத்தின் “கதாநாயகர்களாக” தோன்றினர். அரங்க வடிவமைப்பிற்காக செய்யப்பட்ட வீடு சற்று ஆட்டம் கண்டதால் இன்னொரு நண்பர் அந்த அரைமணி நேரமும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே நின்றார். இவர்களில் இருவர் நாம் போட்டியில் வென்று பரிசு வாங்க மேடையில் ஏறியபோதும் மேடை ஏறவில்லை. ஒருவர் மேடையின் ஓர் ஓரமாய் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். அந்த “வானத்தைப் போன்ற மனம் படைத்த மன்னவர்களை” பார்த்து வியக்க மட்டும் தான் முடிந்தது என்னால்! 

மருத்துவ வாரம் 2016 இல் எமது அணியால் மேடையேற்றப்பட்ட “மீண்டவர்” நாடகத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக எனது உள்ளக்கிடக்கைகளையும் இவ்விடத்தில் பகிர விளைகிறேன். “அன்று நாட்டுக்காக போராடியவர்கள் இன்று சோற்றுக்காய் போராடும் நிலை” என்ற ஒரு கட்டுரையே எமது கதைக் கருவாகிப் போனது. “காப்பெட்” வீதிகளுக்குள்ளும் “KFC” உணவுக்குள்ளும் தொலைந்து போன எம்மை நோக்கிய மறுதலிக்கப்பட்ட முன்னால் போராளிகளின் குரலாகவே நாடகம் அமைந்தது. நாம் சுட்டுவிரலை நீட்டியது எமது சமூகத்தின் மீதே! அவர்களைச் சற்று திரும்பிப் பாருங்கள் என்ற அறைகூவலையே நாம் விடுக்க முயன்றோம். எனினும் சில காட்சிகள் தேவையா இல்லையா அல்லது சரியா பிழையா என்ற வாதப் பிரதி வாதங்களுக்கு அப்பால் மறதி என்ற கொடிய நோய் புரையோடிப் போயுள்ள எமது தமிழ் சமூகத்திற்கு நாம் கொண்டுசேர்க்க முற்பட்ட சேதி போய்ச்சேரவில்லை என்பதில் வருத்தமே எஞ்சியது எமக்கு!

ஒவ்வொரு அணியும் பல நல்ல கலைஞர்களைக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து பலதடவை வாய் பிளந்திருக்கிறேன். பாடசாலைக் காலத்தில் தம்முள் இருந்த திறமைகளை எமது மருத்துவ பீடம் புடம் போட்டு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதாகவே உணர்கிறேன். ஓவ்வொரு அணியும் தமது முதலாம் வருடத்தில் மேடையேற்றுகின்ற ஆற்றுகைகளுக்கும் அடுத்தடுத்த வருடங்களில் மேடையேற்றுகின்ற ஆற்றுகைகளுக்குமிடையேயான வித்தியாசமே இதற்கு தக்க சான்று பகிரும். எனினும் இத்தகைய படைப்புகள் அது நாடகமாகட்டும் இசை ஆற்றுகையாகட்டும் நடனமாகட்டும் அல்லது வேறு வகை ஆற்றுகைகளாகட்டும் அவை யாவும் நான்கு சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படுவது கண்டு வேதனைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு ஆற்றுகையயும் ஏறத்தாழ ஒரு மாத கடின உழைப்பால் உருவாகுகிறது. எனினும் அநேகமாக ஒரு தடவை மாத்திரமே அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றின் தரம் துறைசார் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களின் ஆற்றுகைகளுக்கு சற்றும் குறைவில்லாததாகவே அமைகிறது. எனவே குறைந்தபட்சம் ஆற்றுகைகளை முறையாக ஒளி ஒலிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இவை மருத்துவ மாணவர்களின் ஆற்றுகைகளா? என பார்ப்போர் வியப்பர் என்பது எனது நம்பிக்கை! மேலும் முறையான ஆவணப்படுத்துகை அவற்றை நாம் மீட்டிப்பார்க்க உதவும். எமது மருத்துவ வாரம் 2016 இன் நாடகம் மற்றும் இசைப் போட்டிகளுக்கு வெளிச் சமூகத்திலுள்ள துறைசார் கலைஞர்கள் சிலரையும் பார்வையாளர்களாக அழைத்திருந்தோம். எமது படைப்புகளை மண்டப சுவர்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லக்கூடிய ஊடகமாக அவர்கள் அமைவர் என்பது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அவர்களது விமர்சனங்கள் ஆற்றுகைகளின் தரத்தை அதிகரிக்க உதவும். எனவே அவர்களுக்கான அழைப்பிதழ்கள் தொடர வேண்டும் என நினைக்கிறேன். எது எப்படி இருப்பினும் பட்டமளிப்பு விழாவுடன் பல நல்ல கலைஞர்களின் திறமைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விடுமே என்ற ஆதங்கம் எப்போதும் என்னுள்…………..

 

Editor MSU

Editor of MSU

Leave a Reply