காயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி

கதிர் தேடிக் குவியும் என் கண்மணியில் 
இருள் தேடிக் குவிந்தது ஏன்? 

ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும் 
மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ….. 
நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்…. 
நாணமுற்று வான தேவதை தன் 
மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ… 
விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்…. 

தவறிவிட்டேனோ? இல்லை நான்
தவறிழைத்துவிட்டேனோ? 
மனச்சிறை தாண்டிடா என் மருத்துவக் காதலி 
முதல்முறை ஏன் எனை வெறுத்தாள்? 
மனப்பட்டாசுகள் மௌனமாய் வெடித்தன…. 
கண்ணருவிகள் பெருகிட துடித்தன…. 

தன்னிலை காட்டிட சோகமழை முயன்றும் 
பிறரிடம் என் துன்பம் சிதறாமல் 
புன்னகைப் பூக்களை தெளித்த என் மனதும் 
அன்று சிந்தனை சிற்பி தான்…. 

இரவலாய்க் கிடைத்த உன் இதயம் தன்னில் 
குடியேற்றம் கண்ட சுயநலவாதி நான்…. 
அன்று நரம்பறுத்த வீணை போல் நானானேன் 
என்னில் நகர்வதற்காய் துடித்த ஸ்வரங்களை 
காற்றலையூம் கவரவில்லை….. 
உன் செவிப்பறையூம் உணரவில்லை…. 

ஓரவிழி ஊடுருவி ஒழுகிய கண்ணீர்த் துளிகளில் 
ஈரம்படிந்து இளகிய என் கவிதைதாள்கள் 
உன்னிடத்தில் கற்பனை கட்டவிழ்ந்த
காகித குப்பைகள் என்றாகிடுமோ? 

வண்ணங்கலைந்தாலென்ன!! வண்ணாத்தியின் 
எண்ணச்சிறகுகள் ஓய்வதாயில்லை…. 
வறுமை வெள்ளமதில் கலங்கரை 
தேடியலைந்த காகித ஓடம் நான்…. 

சிறுவயதிலிருந்தே மருத்துவம் என் காதலி 
ஊடுகண்டு உள்நுழைந்த பனித்துளியில் 
என்கடிகார முட்கள் உறைந்திருக்கலாம்…. 
முட்களின் சீற்றத்தால் என் முதல்தேடலில் 
மோகத்தழும்புகள் விளைந்திருக்கலாம்….. 

முதல்முறை ஏனோ எனை அவள் வெறுத்துவிட்டாள்
என்னில் அவள் 
காயாதுறங்கிய கண்ணீர்ச் சருகுகள் எண்றெண்ணி 
மீண்டும் பந்தய நதிதனில் ஓடிட துணிந்தேன் 
என் மருத்துவ காதலிக்காய்…..!! 

வலிகளை தாங்க மறுக்கும் வதனங்களும் உண்டோ? 
என்னில் கருகி வீழும் கண்ணீர்த்துளிகளை துடைத்திட 
காற்றலை கை நீட்டாதோ….. 
காலைக்கதிரொளி விடியல் காட்டாதோ 
பாதை மறந்த இந்த வழிப்போக்கனிற்கும்…..

மு.அனுஜன் – 39ம் அணி

Editor MSU

Editor of MSU

You may also like...

Leave a Reply