மருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி

மருத்துவமும் பகிடிவதையும்

Dr. சிவராசா துஷாரன்

அன்று மாலை 4 மணியிருக்கும் எங்களுடைய விரிவுரைகள் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. வழமை போல் ‘discussion’ போடுவோம் என்று என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, இவன் அறுவான் நச்சரிக்கத் தொடங்கி விட்டானே என்று உள்ளுக்குள் குமுறினாலும் வெளியில் சிறு புன்முறுவலுடன் ‘சரிடா வாறேன்’ என்று ஒப்புக்கு சொல்லி வைத்தேன். அவனும் வழமை போல் ‘இவன் எங்கு வரப் போறான்’ என்று ஒரு பார்வையை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அன்றைக்கென்று ‘discussion’ செல்லாமலிருக்க ஒரு காரணம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த போது, ஒரு சீனியரின் குரல் கடட்ளையிடுவது போல் ஒலித்தது. ‘தம்பி batch rep எல்லாருக்கும் student counselor ஓட meeting இருக்கு கட்டாயம் வரணும்’. இந்த’கட்டாயம்’ என்ற வார்த்தை சொல்லப்படாமல் விட்டால் கூட, எல்லோரும் கட்டாயமாகச் சென்று விடுவதுண்டு. இல்லை, சென்றே ஆக வேண்டும்.

நானும் எங்களுடைய batch இன் பெண் பிரதிநிதியும், [‘discussion போறேன்’ என்று அழுது அடம்பிடித்தவளை] கூட்டத்திற்கு எங்கள் விரிவுரையாளர்களும் வருவார்கள் என்று எனக்கு தெரிந்த பொய்யை சொல்லிக் கண்ணீரும் கம்பலையுமாக அழைத்து சென்றேன். பாவம்! அவள் பயப்படுவது ஒன்றும் எனக்கோ சீனீயருக்கோ அல்ல. ஆண்டாண்டு காலமாக விரிவுரையாளர்களை பகைத்தால் பரீட்சையில் fail ஆவார்கள் என்று யாரோ ஒரு சீனியர் சொன்ன பொன்மொழியை நம்பி.

எங்களுடைய வழமையான விரிவுரை மண்டபம். அப்போது மாலை 5 மணியிருக்கும். நண்பகல் 12 மணிக்கே காரிருள் படரந்திருக்கும். 5 மணியென்றால் சொல்லவா வேண்டும்.

அன்று நான் அங்கு கண்ட காட்சியும், சம்பவமும் அதை மேலும் இருளாக என் அகக்கண் முன்னே காட்டியது. எங்களுடைய student counselor உம், நிர்வாகத்தில் அதிக அனுபவமுடைய பெரும்பாலும் எங்களுடைய மருத்துவபீடம் சம்பந்தமாக நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் காணக்கூடிய நன்கு பரீட்சியமான இரண்டு விரிவுரையாளர்களுமாக மூவர் மேடையில் அமர்ந்திருக்க, எங்கள் சீனியர் batchகளினுடைய பிரதிநிதிகள் கீழே உள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். நாங்கள் இருவரும் விரிவுரை மண்டப வாசலினுள் நுழைந்த போது, ஏறக்குறைய கூட்டம் தொடங்குவதற்கு ஆயத்த நிலையில் இருந்தது. Student counselor பேச ஆயத்தமாக ஒலிவாங்கி முன்னால் குரலை செருமிக் கொண்டிருந்தார்.

எம்மைக் கவனித்த அந்த இரண்டு விரிவுரையாளர்களும், ஒரு அலட்சியப்பார்வயை எம்மீது வீசிவிட்டு மீண்டும் சபையை நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டனர். கீழே இருக்கைகளில் அமர்ந்திருந்த சீனியர் மேலே இருந்தவரக்ளை விடக் கொஞ்சம் கூடவே அலட்சியமாகப் பார்த்ததுவிட்டு, அதோடு சேர்ந்து ஒரு கோபமான பார்வையையும் எங்கள் மீது வீசிவிட்டு, வந்து இருக்கும்படி கண்ணால் ஜாடை காட்டினர். புது அனுபவம் என்பதால் சத்தமில்லாமல் நடந்து கொஞ்சம் பரீட்சியமான ஒரு சீனியரின் பக்கத்தில் சென்று நான் அமர, ஒரு பெண் சீனியரின் பக்கத்தில் சென்று அவளும் அமர்ந்து கொண்டாள். அதுவரைக்கும் எதுக்கு கூட்டம் என்று கூட எனக்கு தெரியாது. சீனியர் ஏதாவது சொன்னால் திரும்பக் கேள்வி கேடக் கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருந்ததால, கூட்டத்தின் காரணம் எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

எங்களுடைய மருத்துவபீடத்தின் student Counsellor பேச ஆரம்பித்தார். அவர் அங்கு வந்திருப்போருக்கு good evening கூட சொன்னதாக தெரியவில்லை. நேராக என்னை சுட்டிக் காட்டி ‘what are we going to discuss today?’ என்று கடும் தொனியில் கேட்டார். நீண்ட காலமாக student Counsellor ஆக இருந்ததாலும், மற்றைய சீனியர்களின் முகங்கள் அவருக்கு ஏற்கனவே பரீட்சியம் என்பதாலும், புதுமுகமான என்னை ஜீனியர் என்று அனுமானித்துக் கொண்டு இந்த கேள்வியை கேட்டார். எனக்கென்றால் வேர்த்துக் கொட்டியது. கொஞ்சம் தலை சுற்றுமாப் போல் இருந்தது. எனது பெண் பிரதிநிதியின் முகத்தை திரும்பி பார்த்தேன். பாவம்! அவள் என்னசெய்வாள்?; அவளுக்கு இது ஒரு கூட்டம் என்று கூடத் தெரியாது. விரிவுரையின் போது notes எடுப்பது போல் கொப்பியையும் பேனாவையும் வைத்துக் கொண்டு எழுத ஆயத்தமாக இருந்தாள். அருகிலிருந்த சீடியர் ‘வையடி கொப்பிய உள்ள’ என்று சொன்னாற் பிறகுதான் கொப்பியை உள்ளே வைத்தாள். மறுபடியும் அதே கேள்வியைத் திரும்பக் கேட்டார். Student counselorஇன் குரல் இன்னும் உச்சஸ்தாயியில் இன்னும் கடுமையாகக் ‘கணீரென்று’ மண்டபம் முழுவதும் எதிரொலித்தது. அதைக்கேடடு எனது உடலும் நடுங்குமாற் போல் இருந்தது. இம்முறை எனது கண்கள் ஒரு சீனியரின் கண்களைப் பார்த்தேன். அவரோ உதடுகளில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை. மறுபடியும் எனது தற்காப்புக்கான சிறுமுயற்சிகள் தோல்வியடைந்தன. பரிதாபமாக கேள்வி கேட்டவர் முகத்தைத் திரும்பி பார்த்தேன்.

நான் அந்தக் கேள்விக்குப்ப திலளிக்காததையிட்டு; ஒரு மகிழ்ச்சிக்குறி அவர் முகத்தில் மின்னலாக வந்து மறைந்ததைக் கவனித்தேன். மற்றைய இரு விரிவுரையாளர்களும் தாம் எதிர்பார்த்தப்படியே தங்களுக்கு சாதகமாக தொடங்கியிருக்கிறது என்ற மகிழ்ச்சிகுறியுடன் இருப்பதை அவர்களுடைய கடைவாயில் அரும்பிய சிரிப்பு சுட்டிக் காட்டியது. இவையெல்லாம் சில நொடியில் நடந்தேறியது.

Student counselor அடுத்த கேள்வியை கேட்டார். அவருடைய தொனியும் குரலும் முன்னையதைக் காட்டிலும் உரப்புடன் தெரிந்தன. Did your seniors rag your batch in orientation?’ அப்பொழுதுதான் எனக்கு இந்த கூட்டத்தினுடைய காரணம் லேசாகப் புரிய ஆரம்பித்தது.

சாதாரணமாகப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்பவர்கள் ஆரம்பகாலத்தில் ஒரு மாதமோ அல்லது சில மாதங்களோ வரவேற்பு என்கின்ற பெயரில் சீனியர்களின் பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுவது எழுதப்படாத ஒரு பாரம்பரியம். இவற்றிற்கான ஆதரவு, எதிர்ப்பு என்பவற்றிற்கு அப்பாற்பட்டு குறைந்தபட்சம் அதன் சாயலையாவது அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. எது எவ்வாறிருப்பினும் இந்த இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும் என்று எனது மூளை ஓடி விழித்தது. எல்லோருக்கும் தெரிந்த உண்மையை ‘ஆம்’ என்று சொல்லவா? இல்லை எங்களுடைய சீனியரக்ள் சொல்லிக் கொடுத்தது போல் ‘இல்லை’ என்று சொல்லவா? அதுவும் இல்லையென்றால், இவர்கள் எல்லோரும் நம்புமாற் போல் ஒரு உண்மை போன்ற பொய்யை எப்படிச் சொல்வது? என் மனதில் ஆயிரம் வாள்வீச்சுகக்ள்.

என்னதான் போலீஸ்காரர்கள் மிரட்டிக் கேட்டாலும் சிலதிருடர்கள் வாய் திறப்பதில்லை. அது போல் பொதுவாக பல்கலைக்கழகத்தில் பல இடங்களில் எம்மை காப்பாற்றக் கூடிய ஒரு உத்தியைக் கையாண்டேன். முன்னால் நிற்பவர் என்ன கேட்டாலும், கடைசிவரை வாய்திறப்பதில்லை, கூடவே ஒரு அப்பாவித்தனமான பார்வையையும் சேர்ந்துக் கொண்டேன்.

இம்முறை கேள்வி சீனியரை நோகக் திரும்பியது. அது ஒரு பெண் சீனியர். பொதுவாக இவ்வாறான கேள்விகளுக்குப் பெண்கள் உண்மையை உளறிவிடுவார்கள் என்ற நம்பிகையில் நிர்வாகிகள் கேடப்துண்டு. ஆனால் மருத்துவபீடத்தை சேர்ந்த பெண்களிடம் இவை பலிப்பதில்லை. அடுத்த சம்பாஷணை இப்படி அமைந்திருந்தது.

Student counselor: ‘did your batch mates rag during the mixing-up yesterday?’

பெண் சீனியர்: ‘No sir, definitely not’

Student counselor: ‘You lair, I think you are in a dark world? You are blind in your life’

பெண் சீனியர்: மௌனம். அதே பரிதாபமான முகம்.

Student counselor: ‘Mixing up will be stopped from today itself, no more talks’.

எனது மனதில் – ‘அவரும் ஒரு சீனியர் தானே’

அங்கு தொடர்ச்சியாக பலதரப்பட்ட வாக்குவாதங்களும், கடுமையான வார்த்தை பிரயோகங்களும் பரஸ்பரம் இடம்பெற்றதாலும் பிரதானமான சம்பாஷணையை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தேன்.

‘பகிடிவதை’ என்ற சொற்பதம் உண்மையில் நாம் நினைப்பதைப் போல் பல்கலைகழகங்களுக்கு மட்டும் தனித்துவமான சொற்பதம் கிடையாது. மனிதனுடைய ‘Primitive emotion’ என்று சொல்லப்படுகின்ற அடிப்படையான உணர்வுகளின் பிரதிபலிப்புகளினால் பாதிப்பைக் கொடுக்கும் எந்தவொரு இடத்திலும் இதை பொருத்திப் பார்க்கலாம்.

The most soft hearted people are the most mistreated people in the world’ என்ற ஒரு அறிஞருடைய கூற்று எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு தெரிந்து என்னுடைய வகுப்பில் படித்த என்னுடைய நண்பர்கள் பலர் பகிடிவதைக்கு பெயர் போன பல்கலைக்கழகங்களுக்கு செல்ல அச்சப்பட்டு வேறு பல்கலைக்கழகங்களையும், முன்னணியில் இருந்த பாடத்திட்டங்களை போடாமல் பகிடிவதைக்கு பயந்து; அதை விட வரிசையில் பின்னாலுள்ள பாடத்திட்டங்களையும் போட்டிருந்தனர். இது உண்மையில் மிகவும் கவலைக்குரியவிடயந்தான். இதை விட சில சீனியர்களிடம் தனிப்பட்டரீதியில் குடும்பத்தகராறு உடையவர்கள் கூட அந்த சீனியர்கள் படிக்கும் இடங்களை தவிர்த்தே பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். அந்த வகையில் Seniority என்பதை ஒரு உச்ச அளவில் அதிகார வரம்பின் இரும்புக்கரமாகப் பகிடிவதைகள் சித்தரித்திருந்தன.

இது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய பொருள், அவ்வளவு இலகுவில் இதை இந்தக் குறுகிய பந்தியில் விளக்கிட முடியாது. எனக்கும் எனது நண்பர்களுக்கும் மேலும் எங்களுடைய சீனியர்கள் ஜீனியர்கள் எனப் பலருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை நான் அறிவேன். அப்படி என்ன நடந்தது? என்று நீங்கள் ஆவலாகக் கேடப்து எனக்குப் புரிந்தாலும் ஒரு சனநாயக சோஷலிசக் குடியரசில் வெளிப்படையாகப் பேசுமளவிற்கு எங்கள் சட்டங்களும் மக்களின் சிந்தனைகளும் பக்குவபப்ட்டிருக்கவில்லை. ஆதலால் அதை பற்றிக் குறிப்பிடாமல் வேண்டுமென்றே தவிர்த்திருந்தேன். நான் ஜீனியராக இருந்து பகிடிவதையின் உச்சபட்ச தண்டனைகளை (capital punishment) சீனியர்களின் வீடுகளில் என்ற வகையிலும், சீனியராக அதற்குரிய உச்ச அதிகாரங்களை பெற்றவன் என்ற வகையிலும் ஒரு உண்மையை அறிந்து கொண்டேன்.

‘அதிகாரம் மட்டும் கைக்கு வந்துவிட்டால் ஆட்சியாளர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது’ என்று விலங்குப் பண்ணை என்ற நூலில் ‘ஜோர்க் ஆர்ஜ்லெஸ்’ என்ற எழுத்தாளர் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.

இதிலே நகைப்பான விடயம் என்னவென்றால் எந்த சீனியர் என்னை அதிகமாகப் பகிடிவதைக்கு உட்படுத்தினாரோ, அதே சீனியர் demonstrator ஆக வந்து பகிடிவதைக்கு எதிராக எங்களுக்கு அறிவுரை சொன்னார்’. ‘Zero Tolerance act’ என்று சட்டமெல்லாம் சொன்னார். எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் மௌனமாகவே இருந்தோம். ஏனென்றால் சீனியரை திருப்பி கேள்வி கேடக் முடியாதே? குறிப்பாக மருத்துவ துறையில் seniority, hierarchy என்ற பெயர்களில் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜீனியர்கள் மீது வன்முறைகள் வேறுபட்ட விதங்களில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை எல்லோராலும் அங்கீகரிகக்ப்படுகின்றது. பகிடிவதைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் என்ன நியாயத்தில் இவற்றை அங்கீகரிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய ‘Internship’இல் எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் ஏற்பட்ட ‘legal ragging’ பற்றி உண்மையில் வருத்தமடைந்தேன். இது இன, மத, பேதம் கடந்து இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் மருத்துவ துறையில் இருந்து வேறு பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இராணுவத்திற்கு அடுத்தாற் போல் மருத்துவ துறையில் தான் ‘Seniority’ அதிகம் வலிமை பெற்றிருக்கிறது. சரி, பிழை என்ற வாதங்களுக்கு அப்பால் வளமான சமூகத்தை உருவாக்குவதில் நாம் பின்னடைந்திருக்கிறோம் என்று கோடிட்டு காட்டுவதற்கு இதைவிட ஒரு குறியீடு அவசியப்படாது. வெள்ளை கோட்டுக்குள் வாழும் கறுப்பு மனிதர்களே நானும் உங்களில் ஒருவன் தான்.

தொடரும்.

  (இந்த ஆக்கம் வவுனியா தமிழ் மாமன்றத்தின் வெளியீடான ‘தமிழ்மாருதம் 2018’ என்ற ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.)

You may also like...

Leave a Reply