வேலி | பகீரதி, 36ம் அணி

பொழுது நண்பகலைத் தாண்டிவிட்டது. மழைமெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. தூவானத்துளிகள் பேரூந்தின் யன்னல் கண்ணாடிகளின் வெளிப்புறமாக வழிந்துகொண்டிருந்தன. பேரூந்தில் இருக்கைகள் அவ்வளவாகநிரம்பி இருக்கவில்லை. எனக்குப்பிடித்தமானயன்னலோர இருக்கையில் தனிமையில் அமர்ந்தபடி நீண்டதொரு பேரூந்துப்பயணம். நீண்டகால இடைவெளியில் கொழும்பிலிருந்து சொந்த மண்ணை நோக்கி……..இதமான காலநிலை, பேரூந்தின் சீரானவேகம், சகபயணிகளின் தொந்தரவின்மை இவைகளாலேயோ தெரியவில்லை அந்தப் பயணம் எனக்கு சௌகரியமாகவே அமைந்தது.

ஈழப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதென அறிவிக்கப்பட்ட பின்னர் மிகவும் காலதாமதமாக முதல் தடவையாகசொந்த இடத்திற்குசென்றுகொண்டிருக்கின்றேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். எல்லோருக்கும் தங்களது பிறந்த இடத்தைப் பற்றி நினைக்கும்போது இனந்தெரியாத ஒரு கர்வம் தோன்றும். அதுவும் ஈழவரலாற்றிலே தனி இடம் பிடித்திருக்கும் யாழ்மண்ணைப் பற்றி நினைக்கும் போது எழுவது காலத்தால் அழியாத கர்வம். அதேபோல்தான் எனக்கும் இருக்கின்றது.

அங்கே வாழ்ந்தது எட்டு வருடங்களாயினும் அந்த சிறுபராய நினைவுகள் பசுமரத்தாணிபோல இன்னமும் கண்முன் வந்துசெல்கின்றன. நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கென இவ்வளவு காலத்தில் ஒருதடவையேனும் நேரம் ஒதுக்கியதுமில்லை; சந்தர்ப்பம் உருவாகியிருக்கவும் இல்லை.

மழை சற்றே ஓய்ந்திருந்தது. மெதுவாக யன்னல் கண்ணாடியை சிறிதளவு நீக்கிவிட்டு பார்வையை வீதியோரமாகத் திருப்பினேன். அது ஒரு பகல்நேரப் பயணம் என்பதால் வேடிக்கை பார்ப்பதென்றாகிவிட்டது. அநுராதபுரத்தை தாண்டியிருப்பது ஒவ்வொரு இடங்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் புதிதாக நாட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் பல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிந்துகொண்டேன். அவை நாட்டப்பட்டிருப்பது பிரயாணத்தின் சௌகரியத்திற்காகவா இல்லை ஆக்கிரமிப்புக்களின் வெற்றியைப் பறைசாற்றுவதற்கான சின்னங்களை அறிமுகப்படுத்துவதற்காகவா என ஒரு சிறு சலனம் மனதை நெருடிச்சென்றது. ஆதாரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுப் புத்தகத்தில் நாம் தொலைத்துவிட்டபக்கங்களை தேடிமட்டுமா அலைகின்றோம்?? பக்கங்களுடன் சேர்த்துபக்க எண்களும் அகற்றப்பட்டு ஆதாரமே இழந்து அல்லவா நிர்க்கதியாகியூள்ளோம். மனிதம் கருவறுக்கப்பட்டு சடலங்கள் பிணந்தின்னி கழுகுகளிற்கு இரையாக்கப்பட்டுசரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளிற்கும் வஞ்சகசூழ்ச்சிகளிற்கும் நெஞ்சை நிமிர்த்தியவர்கள் இன்றுமண்ணில் விழுந்துவிதையாக உறங்குகின்றார்கள். அன்றைய வீரர்களிற்கு அவர்கள் கொடுத்த பரிசு இன்றைய விதவைகளும் அநாதைகளும். நினைவுகள் கடந்தகாலத்திற்குச் சென்றன.

எங்கள் வீடு கடற்கரையை அண்டிய ஒரு கிராமத்தில் இருந்தது. அந்த வீட்டிற்கும் எனக்குமான தொடர்பு வெறும் எட்டு வருடங்கள் மட்டுமே. ஆனாலும் வீட்டைப் பற்றி நினைக்கையில் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர் எங்கள் வீட்டின் பின்னால் வசித்த பாலன் அண்ணா அடுத்தவர் பக்கத்துவீட்டு லதா அக்கா.

பாலன் அண்ணா என்னை விட மூன்று வயது மூத்தவர். எங்கள் வீட்டிற்குப் பின்னால் உள்ள காணியில் அவர்களது வீடு. குடிசைவீடு. எங்கள் வீட்டு வேலியால் எட்டிப் பார்த்தால் அவர்களது வீடு தெரியும். அண்ணாவிற்கு அப்பா கிடையாது. மூன்று சகோதரர்கள். அவர்களது அம்மா கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். மாலைவேளைகளில் என்னோடு விளையாடவருவார். அந்த வேலியினூடாக அவரால் நுழைந்துவர இயலுமானதாக இருந்தது. நான் பாடசாலை போகத் தொடங்கியிராத பருவம் அது. அவர் தனது பாடப்புத்தகங்களிலிருந்து படங்கள் வெட்டியெடுத்துக் கொண்டுவந்து என்னிடம் தருவதும் நான் அவற்றை சேகரித்து வைப்பதும் அன்றைய எமது பொழுதுபோக்குகள். ஆனால் என்னவோ தெரியாது அண்ணாவுடன் சேர்வது அம்மாவிற்குப் பிடிப்பதில்லை. அவையள் “வேறையாக்கள்” என அடிக்கடி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அதன் அர்த்தம் எனக்கு அப்போது விளங்கியிருக்கவில்லை.

பகல் பொழுதுகளில் அடிக்கடி பக்கத்து வீட்டில் தான் நிற்பேன். அக்கா வீட்டுப் பக்கமாக இருந்த வேலியினூடு சிறு இடைவெளி ஒரு ஆள் நுழைந்து செல்லுமளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக சென்றுவருவது சுலபம். இவ்வாறானதொரு இடைவெளி பின் வேலியில் ஏன் அமைக்கப்படவில்லை என்று பல தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் அது அங்கு செல்வதை தடுப்பதற்காக என அப்போது அறியவில்லை. பக்கத்துவீட்டிற்கு சென்று வருவதையாரும் தடுக்கவில்லை. அதன் அர்த்தமும் விளங்கவில்லை.

கொஞ்சக் காலத்தில் எங்கள் வீட்டின் முன்புறமும் பின்புறமும் இருந்தவேலிகள் அகற்றப்பட்டுமதில் கட்டப்பட்டது. இப்போது அண்ணா எங்கள் வீட்டிற்குவருவதில்லை. அவர்கள் வீட்டிற்குச் செல்லும் வழி கூட எனக்குத் தெரியாது. எல்லாம் அந்தவேலிவழியாகத் தான் இருந்தது.

2000 ஆண்டுகாலப்பகுதியில் உள்நாட்டுப்போர் உக்கிரமாகி நாங்கள் பல இடங்களில் தஞ்சம் புகுந்து இறுதியாக கொழும்பில் குடியேறிவிட்டோம். எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்டமையால் அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் குறைந்துவிட்டன. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகி, ஆண்டுகள் 17 ஆகிவிட்டன. இராணுவத்திடமிருந்து வீடுகள் விடுவிக்கப்பட்ட பின்னர் அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாணம் சென்று சில திருத்தவேலைகளைச் செய்து அங்கேயே தங்கிவிட்டனர். வேலை காரணமாக என்னால் சென்றுவர முடியவில்லை. 17 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இன்று செல்கிறேன்.

தொலைபேசி அழைப்பொலி கேட்டு நினைவுகளிலிருந்து மீள்கிறேன். கிளிநொச்சியை அடைந்திருந்தமையை பெயர்ப்பலகைகள் உறுதிப்படுத்தின. புதியகட்டடங்கள், மறுசீரமைக்கப்பட்ட வீதிகள், அதில் பயணித்துக்கொண்டிருக்கும் சொகுசுவாகனங்கள் என ஒருபுறமும், போரின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில் சோற்றிற்குள் முழுப்பூசணியை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இன்னொரு புறமுமாக புதியதொருபரிமாணம் அங்கே எட்டிப்பார்த்தது. போகும் பாதை எங்கும் இன்னொரு ஈழம் நீண்டுசென்றது.

யாழ்ப்பாணத்தின் மாற்றங்களையூம் கண்டவாறே இரவு 7.30 மணியளவில் வீட்டை வந்தடைந்தேன். அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. மறுநாள் காலையில் எழுந்தபோது களைப்பெதுவுமின்றி , சுத்தமான காற்றை சுவாசித்தவாறே வெளியில் சென்றபோது, அண்ணாவைப் பற்றிய நினைவு வந்தது. அம்மாவிடம் விசாரித்தவாறே வெளியில் சென்றேன். அவர்களது வீடு இருந்த காணியில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு இருந்தது. “எங்கடை ஆக்கள்” தான் இந்த காணியை வாங்கி இப்ப வீடு கட்டி இருக்கினம். அவனை பிடிச்சுக் கொண்டு போனதாம் எண்டு கதைச்சினம் எனஅம்மா பதில் கூறிய திருப்தியுடன் உள்ளே சென்றார். அது என் கேள்விக்கான பதில் மட்டுமல்ல இனிமேல் அக்கேள்வியே கேட்கக்கூடாது என்பதற்கான முற்றுப்புள்ளி என இப்போது புரிந்துவிட்டது.

“அவர்களிற்கு” நாங்கள் எல்லோருமே ஒன்று தான். ஆனால் எங்களிற்குள் நாங்கள் “வேறவேற ஆக்கள்”. வேலிகள் எங்கள் வீடுகளிற்கிடையில் போடப்படவில்லை. எங்கள் ஒவ்வொருவரின் மனதினுள்ளும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவர் மனதிலும் காலத்திற்கு காலம் வேலிகள் மதில்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதில்கள் உடைக்கப்பட்டு வேலிகள் தகர்த்தெறியப்பட்டு மனங்கள் ஒன்றிணைக்கப்படும் வரை கல்லறைகள் வெறும் நினைவுச் சின்னங்களே…………. நிஜங்கள் அல்ல…………

பகீரதி
36ம் அணி

 

Editor MSU

Editor of MSU

Leave a Reply