நள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி

எல்லையில்லா பயணமொன்றில் தொலைதூரம் பறந்த ஓர் பறவை சிறகுகள் வலிமையிழக்கும் தருணத்தில், பறப்பதை விடுத்து கடலில் வீழ்ந்தாலென்ன? என்று சிந்திக்கத் துலங்கும் கணம் நள்ளிரவு 12 மணிகளைத் தாண்டியபடியே செல்லும் இது தலைப்பல்ல. பல இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தம் தலைவிதி. வெற்றிப் பாதைகளில் சலிக்கக் கூடாது தான். பரவாயில்லை இரவின் இருளை ரசித்துச் சலிப்பதில் அப்படியென்ன தவறிருக்க முடியும்?

சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் கல்லூரிக் காலங்களை சுவையாகக் காண்பித்ததை ரசித்த பின் நிஜங்களை அவ்வளவு தூரம் இருக்காதென்பதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் அதிகம் மனவலிமை தேவை தான்.

பொதுவாக இலங்கைப் பல்கலைக்கழகக் கற்கைகளுக்குத் தெரிவாகும் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை அவ்வளவு சுமையாகக் கருதியிருக்க மாட்டார்கள். ஆதலால் தான் பல்கலைக்கழகம் தெரிவானதை அறிந்த ஆரம்ப நாட்களில் தமது கற்கைநெறிகள் தொடர்பில் அவர்கள் அவ்வளவாகக் கவலைப்பட்டதில்லை. இவ்வாறான சராசரி சிந்தனைகளுக்கு நானும் ஒன்றும் விதிவிலக்கானவனல்ல. மற்றவர்களைப் போன்று ஆரம்ப நாட்களில் அவ்வாறே கருதியிருந்தேன்.

ஒரு சமயம் புதிய சூழல் தொடர்பான பயமும், புதிய அறிமுகங்களையும் சிரேஸ்ட மாணவர்களை எப்படி சமாளிப்பது என்ற எண்ண ஓட்டமும் இருந்தாலும் கற்கைகள் தொடர்பில் அவ்வளவாகப் பயத்தை நான் வளர்த்துக் கொண்டதில்லை. சிரேஸ்ட மாணவர்கள் என்று சொல்லும் போது எனக்கு ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. யாழ் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்படும் போது சிரேஸ்ட மாணவர்கள் அவர்களுடன் அந்நியோன்யத்தை ஏற்படுத்துவதற்காக “Mining up” (வழமை போல ஏதோ ஒரு பெயர்) என்ற ஒரு நடைமுறை இருந்தது. முதல் இரண்டு கிழமைகளுக்கு மாலைநேரங்களில் வகுப்புக்கள் முடிந்த பிறகு சுமார் 2 மணித்தியாலங்கள் வரை சிரேஸ்ட மாணவர்கள் (பொலிஸ் தீவிர விசாரணை செய்தோம் என்பது போல) கொஞ்சம் தீவிரமாகக் கலந்துரையாடுவார்கள்.

இப்படியான ஒரு நாளில் எங்கள் பீடத்தின் பீடாதிபதி இவ்வாறான சம்பவங்களுக்கு இனிமேல் இங்க இடமில்லை என்று சொல்லி ஒட்டுமொத்த மாணவர்களையும் வெளியேறும்படி பணித்தார். சிரேஸ்ட மாவர்களுக்கும் பீடாதிபதிக்கும் இடையே சண்டை மூண்டது. வாய்த்தகராறு தவறான வார்த்தைகளைக் கூட பாவிக்கும் கீழ்நிலைக்கு இருபாலாரையும் இட்டுச் சென்றது என எண்ணும் போது “அரேபியக் கழுதையானாலும் பிறவிக்குணம் போகாது” என்ற ஆரம்ப வகுப்பு பழமொழியொன்று எனக்கு ஞாபகத்தில் வந்தது. ஆரம்பத்தில் ஆசிரியரை மதிக்கத் தெரியாத மாணவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தாலும் பின்னாளில் நிர்வாகங்களின் கடும்போக்கும் விட்டுக் கொடுக்காத தன்மையூமே இத்தகைய நிலைக்கு மாணவர்களை இட்டுச் சென்றது என்பதை மறுப்பதற்கில்லை.

“படி” என்ற வார்த்தையை புலமைப்பரிசில் பரீட்சையில் ஆரம்பித்து உயர்தர பரீட்சை வரை வீடுகளிலே கேட்டு சலித்துப் போன மனதுக்கும் அது பழகிப் போன செவிகளுக்கும் மீண்டும் ஒருமுறை பேராசிரியர் முதற்கொண்டு டெக்னீசியன்கள் வரை படிக்கும்படி அறிவுரை சொல்வதைக் கேட்கும் போது எந்த மருத்துவ மாணவனுக்குத் தான் பிறவிப்பயனை அடைந்த துன்பம் வராது.

அவர்களின் வார்த்தைகளிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது என்பதை பரீட்சைகள் அண்மிக்கையில் மாணவர்களே புரிந்து கொள்வர். பரீட்சைகள் ஒன்றும் அவ்வளவு சுலபமானவையல்ல. ஒரு சராசரி மாணவனுக்கு (மருத்துவ பீடத்தில்) ஒவ்வொரு பரீட்சையும் பகீரதப் பிரயத்தனம் தான். அப்படியென்றால் கற்கும் மெல்லக் கற்கும் மாணவனுக்கோ சிம்ம சொப்பனம். ஓவ்வொரு பரீட்சைக்கும் மாணவர்கள் எவ்வளவு  கஷ்;டப்படுவார்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அறிஞர்கள் சொன்னது போல் வாழ்ந்து பார்க்க வேண்டும். பிரிட்டிஷ்;காரர்கள் புத்தகங்களைக் கொடுத்து நமது பிஞ்சுவிரல்களை நசுக்கி விட்டார்கள் என்று ஓர் அறிஞன் சொன்னதில் ஒன்றும் தவறில்லை தான். இந் நேரத்தில் எமது பீடத்தில் பிரபலமான ஒரு வாக்கியம் நினைவூக்கு வருகிறது. “kill medical students to save patients”.

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்க மாட்டாது என்பது மருத்துவபீடத்தில் கற்பவர்களுக்கு சாலப் பொருந்தும். ஏதோ ஒரு கனவுலகத்தில் நடப்பதைப் போலவே உணர்வோம். Practicals, tutorials, dissection  என்று நாட்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதில் என்ன கொடுனை என்றால் எல்லாவற்றுக்கும் 80% attendance இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் பரீட்சைக்குத் தோற்ற முடியாது. அடுத்த வகுப்புடன் தான் பரீட்சை எழுத வேண்டும். இது சரி பிழை என்ற வாதத்துக்கு அப்பால் என்னுடைய நண்பர்கள் பலர் இந்த சிஸ்டத்தால் அடுத்த வகுப்பில் படிக்கும் துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் எவ்வளவூ தூரம் மனதளவில் உடைந்து போனார்கள் என்பது எங்களுக்குத் தான் தெரியும்.

மூன்றாம் வருட ஆரம்பம் முதல் நாங்கள் வைத்தியசாலைக்கு கற்கைகளுக்காக செல்வோம். சிறுவயதுகளில் வைத்தியசாலைக்கு செல்வதென்றால் மனதிற்குள் ஓர் இனம்புரியாத பயமும் ஓர் அருவெறுப்பும் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

ஆஸ்பத்திரி சல்லோன் மணமும், எங்கோ என்னைப் போன்ற சிறுவனோ அல்லது குழந்தையோ அழுகிறது. அது ஊசி போட்டதனால் தான் அழுகிறது என்ற என்னுடைய கற்பனையும் ஊசி போடும் போதான தாதியர்களின் இறுக்கமான முகமும் என்னுள் ஆஸ்பத்திரி தொடர்பிலே இனம்புரியாத பயத்தை உருவாக்கியிருந்தன. எனவே தான் ஆஸ்பத்திரிக்கு கற்பதற்காக சென்ற ஆரம்ப நாட்களிலே அந்தப் பயம் தௌpவதற்கே பலகாலம் சென்றது. ஆனால் என்ன பயன்? புதிதாக வேறொரு பயம் தொற்றிக் கொண்டது.

மருத்துவ மாணவனானகப் பாத்திரமேற்று வைத்தியசாலைக்குள் நுழைந்தால் அதற்குப் பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகளவில் தேவை. வேறுபட்ட வர்க்க சிந்தனைகளும் தரப்படுத்தல் வேறுபாடுகளும் அதிகளவில் கொண்ட வைத்தியசாலையில் “The least important people”  என்று எம்மைக் குறிப்பிடுவர். அதாவது எம்மால் அவ் வைத்தியசாலைக்கு கற்கும் காலப்பகுதியில் எவ்வித உதவியும் இல்லை. நாம் கற்கைகளுக்காகவே வருகிறோம் என்பதைக் குறிக்கவே அப் பதம் உபயோகப்படுகிறது. ஆனால் வைத்தியசாலையில் இருக்கும் வைத்தியர் முதற் கொண்டு அங்கு வேலை பார்க்கும் ஊழியர் வரை எம்மை ஒரு மாணவராக சித்தரித்து ஒரு மேல்தட்டு வர்க்க சிந்தனையில் பார்க்கின்ற சமூகப் பார்வையை சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

நோயாளர்கள் முன்னிலையிலும் வார்ட் ரவூண்ட்களிலும் எல்லோரும் சூழ்ந்து நிற்கையில் எமக்குக் கற்பிப்பவர்கள், குரு சீட பரம்பரைச் சிந்தனையுடன் எம்மைச் சாடும் போது ஏற்படக் கூடிய அவமானமும் மன சோதனையும் ஆற்ற முடியாதவை. அவை தேவை தான் என்ற வாதங்களுக்கு அப்பால் அதில் வலி இருக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இப்படி பாலுமகேந்திராவின் கதை நேரம் போல அடுக்கடுக்காக சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

step-1-balanceஏன்ன இவன் கடுமையாக சலித்துக் கொள்கிறானே என்று சிந்தித்து விடாதீர்கள். அறிஞர் ஒருவர் சொன்னதைப் போல வாழ்க்கை என்பது பழங்கள் நிறைந்த ஒரு கூடை. அவற்றில் சில இனிப்பானவை, சில புளிப்பானவை. இனிப்பான பழங்களைப் பற்றி நான் பேசவில்லை. புளித்த பழங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன். நீங்களும் ஒருமுறை சுவைத்துப் பாருங்கள். எது எப்படியோ இது பற்றி எழுதும் போது கூட நள்ளிரவு 12 மணியைத் தாண்டித் தான் இருக்கின்றது.

 

This article appeared on two magazines published by All University Students Development Association - Vavuniya and Tamizhmaamanram.

 

You may also like...

1 Response

  1. Well done Thusharen. 🙂

Leave a Reply to Paul Bright Benedict Cancel reply