காரிருளில் ஒரு மின்னல் | பகீரதி – 36ம் அணி

நட்சத்திரங்களைத் தொலைத்ததில் வானம் அழுது வடித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் கூட தங்களின் சோகத்திற்கான பங்கை பாரபட்சமின்றி வழங்கிக்கொண்டிருந்தன. ஜன்னல் மீது வழிந்தோடும் நீர்த்திவளைகள் “டங் டங்” என ஒரு நாதத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. இயற்கையில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்திலும் இசை கலந்து இருக்கின்றது என்று சும்மாவா சொன்னார்கள்? விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் தஞ்சமடைந்திருந்த நேரம் அந்த இசை நாதத்தில் என் தூக்கம் கலைந்து போனது.

நேரம் 5.30ஐ தாண்டியிருக்கவில்லை. ஆனால் சூரியனின் வருகைக்குக் கூட இடமளிக்காமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்னும் குறைந்தது 30 நிமிடங்களேனும் தூங்கலாம் போல் இருந்தது.

அடைமழைக் காலங்களில் நானும் எனது தம்பியும் போட்டி போட்டுக்கொண்டு காகிதக் கப்பல் விட்டு விளையாடுவோம். அநேகமாக கப்பலை விட நாங்கள் அதிகமாக நனைந்து விடுவோம். ஆனாலும் சிறு வயது குறும்புகள் சொல்லில் அடங்காதவை. இரவு வந்தால் அந்த வாய்க்கால் பக்கம் தவளைகள் கத்துகின்ற சத்தம் இரண்டு வீடு தள்ளி வந்து கேட்கும். அந்த சத்தத்தை படுத்திருந்து கேட்கின்ற போது பெரிய பயங்கரமாக இருக்கும். ஆனாலும் என் செவிகளில் தவளை சத்தம் கூட எப்போதும் ஒரு நாதத்தோடு தான் ஒலித்துக் கொண்டிருக்கும். சிறு தூறல் மழையில் எழும் மண் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். மழை பெய்து ஓய்ந்ததும் இலைகளின் நுனியில் இருந்து வழியும் நீர்த்துளிகளைக் கையால் தட்டி விடுவதென்றால் கொள்ளை இன்பம். அவ்வேளையில் மரக்கிளைகளிலிருந்து தலையில் விழும் நீர்த்துளிகளை வெறுப்பதுண்டு என் வேலையில் குறுக்கீடு ஏற்பட்டது போல் உணர்ந்தேன்.

யாரும் இல்லாத தெருவில் சூரியன் கூட உதித்திராத அதிகாலைப் பொழுதில் கொட்டும் மழையில் தெரு விளக்குகளின் வெளிச்சத்தின் கீழ் நான் மட்டும் தனியே நடந்து போக வேண்டும் என்பது இன்று வரை கனவாகவே உள்ள எனது ஆசை. எங்கிருந்தோ வந்த மணியோசை நேரம் 6 ஆகியதை உணர்த்தியது. மழை சிறிது கூட ஓய்ந்தபாடில்லை நினைவூகளிலிருந்து மீண்டும் எழுந்து என் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கிய கிராமம் ஒன்றைப் பற்றிய தகவல்களை பல்வேறு எண்ணக்கருக்களின் அடிப்படையில் சேகரித்து பகுப்பாய்வு  செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். வழமையாக சிறு தூறல் மழையில் கூட எனது மோட்டார் சைக்கிளை வெளியில் எடுப்பதற்கு பல மணி நேரம் யோசித்து முடிவெடுப்பேன். ஆனால் இன்று எந்தவித யோசனையும் இன்றி மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டி இருந்தது. ஏனெனில் அந்தக் கிராமத்திற்கான போக்குவரத்து வசதி சீரற்று இருந்தமையால் ஏற்கனவே அந்தக் கிராமம் பற்றிய விபரங்கள் எனக்கு வழங்கப்பட்டிருந்தமையால் எனக்குள் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. எனினும் மழையின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டு செல்ல வேண்டியதை நினைக்கும் போது கொஞ்சம் அசதியாகவும் இருந்தது.

9 மணியளவில் நான் அங்கு சென்றடைந்தேன். ஏற்கனவே அக் கிராமவாசிகளிற்கு இச் செயற்பாடு பற்றிய அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு யாரும் என்னைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தவறான வேளையில் வந்து விட்டேனோ என்பது போல் இருந்தது. ஏனெனில் எல்லோரும் மழையுடன் போராடிக் கொண்டிருந்தனர். எனக்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது போல் தோன்றவில்லை.

அடைமழை என்றால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது தானே என்று மட்டுமே எண்ணிய நான் மழையின் கோரத்தனத்தின் மறுவடிவத்தை அன்று கண்டேன். தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடிசைகளின் கூரையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. என் சிறு வயது ஞாபகம் தொற்றிக் கொண்டது. ஆனாலும் அதைத் தட்டி விட எனக்குத் தோன்றவில்லை. உள்ளே வராதே எனத் தடுத்தும் அதையும் மீறி வெள்ளம் குடிசைகளிற்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. தட்டிக் கேட்க யாரும் இல்லை என்பது போல் இருந்தது.

111-12ஈரக்காலுடன் யாரும் வீட்டிற்குள் வந்தாலே முகம் சுழித்துக்கொண்டு விலத்தி நடப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. காகிதக் கப்பல்கள் மிதக்க வேண்டிய வெள்ளத்தில் பாத்திரங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதை யாரும் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை. ஒரு வேளை மீண்டும் அவை உரிய இடத்திற்கு வந்து சேர்ந்து விடும் என்று எண்ணினார்களோ! ஓவ்வொரு குடும்பத்தின் எதிர்காலமும் குடிசையின் வாசலோரம் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.

அவர்களின் மனதில் உதித்த எண்ண அலைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொது இடங்கள் கால்நடைகளின் கூடாரமாக மாறியிருந்தன. சிறு தவளையின் சத்தத்தை கூட இசையாக ரசித்த எனக்கு அந்தப் பிரதேசத்தில் இருந்து எழும் ஒவ்வொரு ஓசையும் இரைச்சலாகவே தோன்றியது.

மிகுந்த சிரமத்துடன் எனது மோட் டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு எனக்கென ஒதுக்கப்பட்ட அந்த சிறு குடிசை போன்ற கட்டடத்தில் நுழைந்தேன். ஒரு சிறிய மேசையும் கதிரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என் வருகைக்காகவே காத்திருந்தவர்கள் போல கட்டடத்தினுள் ஒவ்வொருவராக நுழையத்தொடங்கினர். அவர்களின் முன்னும் பின்னும் இடையிலும் தோளிலும் துளிர்விட்ட மொட்டுக்களாய் அடுத்தடுத்த வயதுக்குரியவர்களாய் வாரிசுகள் ஒட்டிக்கொண்டிருந்தனர். ஓவ்வொருவரின் பேச்சிலும் நடத்தையிலும் அவர்கள் எத்தனையோ தலைமுறைகள் பின் தங்கியிருப்பது தெரிந்தது. நாகரீகத்தின் சுவடு கூட இன்னும் அங்கு அறியப்படவில்லை. கல்வி என்பது கனவாகிக் கிடந்தது. நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான உணவு மட்டுமே அவர்களின் தேவையாகவும் தேடலாகவும் இருந்தது.

111-13நான் வந்த நோக்கத்தை விட அங்கு உதித்த மொட்டுக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதை உணர்ந்தேன். மழை முன்னையதை விட இன்னும் பலமாக பெய்து கொண்டிருந்தது. மழை ஒரு ரசனைப்பொருளாகவே உணர்ந்த என்னை மழைக்குள் ஒரு வாழ்க்கையே இருக்கின்றது அதையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அந்த சூழ்நிலை உணர வைத்தது. என் மனதில் இனம் புரியாத எண்ணங்கள் எழுந்து கொண்டிருந்தன.

நேரம் 11ஐ தாண்டிவிட்டது. ஆனாலும் மழை ஓய்ந்தபாடில்லை. எனது வேலை ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருந்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் தங்களுக்குள் ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர். இடையிடையே என்னையும் கவனித்துக் கொண்டதை நான் கவனித்துக் கொண்டேன். மனதில் எதை எண்ணினார்களோ தெரியவில்லை ஆனால் அவர்கள் தங்கள் முகங்களில் வெவ்வேறு ரசனைகளை கொண்டிருந்தார்கள்.

மழை விட்டபாடில்லை ஆனால் எனக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டது. நான் மழையைக கூடப் பொருட்படுத்தாமல் புறப்படுவதற்கு தயாரானேன். நான் வந்ததன் நோக்கத்தை மறுபடியும் சுருக்கமாக கூறிவிட்டு அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேறும் தருணத்தில் யாரோ என்னைத் தடுப்பது போலிருந்தது. திரும்பினேன் யாரையும் காணவில்லை. காலடியில் சிறு ‘மொட்டு‘ ஒன்று நின்றுகொண்டிருந்தது. அது என்னை நிமிர்ந்து பார்த்த பார்வையில் பல வகையான கேள்விகள், தேடல்கள், உணர்வூகள், புதிர்கள் ஒவ்வொன்றையும் என் ஆழ் மனதால் நன்கு பிரித்தறிந்து கொண்டேன்.

எல்லா கேள்விகளிற்கும் விடை பிறந்தது போல் உணர்ந்து கொண்டதாய் முதல் தடவையாக மண்டியிட்டு வெள்ள நீரில் உட்கார்ந்தேன். மழை மெதுவாகக் குறையத்தொடங்கியது. காரிருள் மேகங்களிடையே இருந்து சூரியக் கதிர்கள் பூமியை ஆட்கொள்ளத் தொடங்குகின்றன.

சி. பகீரதி – 36ம் அணி


 

The Cover Page of Naadi -12

The Cover Page of Naadi -12

This short story by Ms. S. Bahirathy, (36th Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014

Editor MSU

Editor of MSU

You may also like...

Leave a Reply