கவி நாடி | உமாசுதன் – 33ம் அணி

உளிக்கரம் கொண்டு உயிர்ச்சிலை தேடுவோனாய்
தோளில் வலையேந்தி தொடுகடல் நாடுவோனாய்
ஒளித்தடம் பற்றி உய்வு காண வாவுவோனாய்
கையில் பேனாவுடன் ஓர் கவி நாடி பயணம்

எண்ணக் கனாவில் எட்டிய கற்பனையோ
கண்ணில் சிறைப்பிடித்த காட்சிப் பதிவுகளோ
மண்ணிற் பலர் பகன்ற சொல்லின் தழுவல்களோ
என்ன நான் தொடுக்க ஏங்கும் இதயம்

மார்கழிப் பனி இரவில் முற்றத்தில்
மொட்டவிழும் கொடிமுல்லை
தருந் துளி நறவம் அருந்தி
பெருந்தும்பி இசைக்கும் சிருங்காரமும்

முகிற் திரை திறக்கும் சூரியக்
கோல ஒளி கீழையில் எட்டிப்பார்க்க
சோம்பல் முறித்துச் சுழலத் தொடங்கும்
பூமிப் பந்தும் புதினங்களும்

ஓடிக் கலகலத்து ஒதுங்கும் சிறுபன்னல்
ஆரத்தழுவி மண்ணை அணைக்கும் அலைச்சிதறல்
தூரத்தெரியும் ஒருகோட்டில் முத்தமிடும் கடல்வானம்
உடல் அளைந்து உளம் நனைக்கும் உப்புக்காற்றும்
தூரிகை இட்டுத் துலக்கிட்ட – பல்
வண்ணச் சித்திரக் கிறுக்கல்களாய்
எண்ணச் சுழிக்குள் சிக்கி தவழும்
இச் சின்னக் கவிக் குழந்தை

மையிட மறந்துவிட்ட பேனாவால்
மனப் பிம்பப் பிரதிபலிப்புகளை
வெள்ளைக் காகிதத்தில் வடித்துவிட
வேண்டி விழையும் பேராவல்

மௌன நடுநிசியில் முகாரியிசைத்து
இமை தடவும் கவின் கனவோ
நாண நடை நடக்கும் தோகைமயில்
எனை விழிக்கும் அவ் எழிலோ

உந்தி உள்குழிய உழைக்கும் ஏழை
நாள் நகரும் நற்கதையோ
தொந்தி குறையவென தோள்கொட்டி
நடை பயிலும் தனவந்தர் நல்குரவோ

மழலையின் சிரிப்போ, மல்லிகை முகிழ்ப்போ
கானகத்து அரசியலோ, கண்திறக்கும் புதுக்கதையோ
தேவதை பாசுரமோ, தென்றலின் புனைமொழியோ
எதையெதை யான் அடியெடுக்க, சொல்தொடுக்க

சிந்தையில் சிறு சலனம் -அந்தியில்
அலசுவோமென அசந்து திரும்பகையில்
சொட்டும் மழைத்துளிக்கு ஒற்றையிலை- குடைபிடித்து
ஓர் மௌனக் கவி பேசின இரட்டை ரோஜாக்கள்

 கதிரமலை உமாசுதன் – 33ம் அணி


The Cover Page of Naadi -12

The Cover Page of Naadi -12

This verse by Mr.K. Umasuthan, (33rd Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014

Editor MSU

Editor of MSU

You may also like...

Leave a Reply