மோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி

புன்னகையால் புதிரெழுதி
பார்வையால் பதிலளிக்கும்
பெண்வர்க்கத்தின் இருபத்தியொரு வயது
இளங்குமரி அவள்
வன்னஞ்சினை வெறும் வார்த்தைகளால்
கக்கும் கருநாகம் ஈன்ற கடைக்குட்டி

பொய் அவள் புதிதாய் வாங்கிய எழுதுபேனா
அடிக்கடி கிறுக்கிப்பார்ப்பாள்
அழகென்ற அகங்காரம் அவள் அம்மா
அணிவித்த அட்டிகை போலும்
பிரிந்திருக்கப் பிரியமில்லைஅவளுக்கு
அவள் வெட்கப்பட்டு விரல் கோர்த்து
விழிமூடும் நாகரிகம்
சிலசமயம் ரசிக்கப் பிடிக்கும்
இலக்கியத் திருட்டுக்கள்

111-34
என் காதல் அவளுக்கு கசக்கின்ற காலைக்காபி
கனவுகளில் மட்டும் அருந்தத் தெரிந்த
பிணி தீர்க்கும் வலிநிவாரணி
ஆண்களை அனுசரித்து
அனுபவிக்க ஆசையில்லலா அப்பாவி
வாக்கிங்க்கு வழித்துணையாய்
ஆண்நாய் அவசியமென்று
அடம்பிடிக்கும் சுயநலச்சுனாமி

சமயங்களுக்கேற்ப நிறம்மாறத் தெரிந்த
பச்சோந்திகளிற்கு பாடம் நடத்தும்
பட்டதாரிப் பள்ளியாசிரியை
கணங்களை ரணமாக்கும் கைங்கரியம்
கண்களில் நான் கண்ட கடன்காரி
அறவிடமுடியாமல் அழிந்து போனவை ஆயிரம்
தான் மட்டும் தப்பிப் பிழைக்கும் கூர்ப்புத் தெரிந்த
சமுதாய சங்கதிகளில் உரசி வாழும் ஒட்டுண்ணி

சிலநேரத் துடிப்புகளும் முழுநேர நடிப்புக்களும்
இயல்பாய் அமையப்பெற்ற மேடைநடிகை அவள்
சிந்தும் கண்ணீர் சித்தரிப்பா
தத்தளிப்பா என
புத்தி சொல்வதற்குள் சிறந்த ஆளுமைக்கான
விருதை தட்டிச் சென்றிருப்பாள்

அடைமழைக்காலங்களில் உடலுஷ்ணம்
தணிக்க மடி தந்த வெண்மேகமவள்
சூரியன் கூட சில்லெனத் தோன்றிய
சிந்தனை அப்போது எனக்கு
தேகங்கள் தீப்பற்றிக் கொள்ள
வேறொன்றும் வேண்டாம்
அவள் வியர்வைத் தீக்குச்சி மட்டும் போதும்

ஹைக்கூவூக்கும் கடவுச்சொல்லுக்கும்
கருவாகி எருவாகிப் போனவள்
நான் மோகமுற்ற மேகமவள்
இராப்பகலாய் கலையாதிருக்கிறாள்
பகலிரவாய் தொலையாதிருக்கிறாள்.

ஜே.சாள்ஸ் – 36ம் அணி


 

The Cover Page of Naadi -12

The Cover Page of Naadi -12

This verse by Mr.J. Charles (36th Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014

Editor MSU

Editor of MSU

You may also like...

Leave a Reply